என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கொள்ளிடம் ஆறு"
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கிராமத்தை சேர்ந்த சில விவசாயிகளின் மாடுகள் கொள்ளிடம் ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்று மேய்ச்சலில் ஈடுபட்டு திரும்புவது வழக்கம். அதன்படி ஆற்றின் நடுத்திட்டு பகுதிக்கு மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றன. இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றுக்கு காவிரி ஆற்றில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றில் தண்ணீரின் அளவு வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது. இதனால் மாடுகள் கரைக்கு திரும்பவில்லை.
இதையடுத்து விவசாயிகள் கொடுத்த தகவலின்பேரில் நேற்று முன்தினம் அங்கு வந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அதிகாரி மோகன்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மிதவை படகு மூலம் மாட்டின் உரிமையாளர்களை நடுத்திட்டு பகுதிக்கு அழைத்து சென்றனர். மேலும் அங்கிருந்து கரைப் பகுதியை நோக்கி மாடுகளை விரட்டினர். ஆனால் தண்ணீர் அதிக அளவு சென்றதால் மாடுகள் மீண்டும் நடுத்திட்டு பகுதிக்கே திரும்புவதற்கு முயற்சித்தன. இதனால் அவற்றை மீட்க முடியவில்லை.
இதைத்தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு பெரம்பலூர், அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்ட தீத்தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் அதிகாரி அம்பிகா தலைமையில் ஆற்றின் கரையில் இருந்து நடுத்திட்டு பகுதிக்கு மிதவை படகு மூலம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் விவசாயிகள் கொண்ட 50 பேர் அடங்கிய குழுவினர் சென்றனர். அவர்கள், மாடுகளை மீண்டும் தண்ணீரில் இறக்கி கோடாலிகருப்பூர் கரைக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் மாடுகள் மீண்டும் நடுத்திட்டு பகுதிக்கு சென்றன.
இதையடுத்து தீயணைப்பு வீரர் முத்துகுமார், ஒரு மாட்டை தன்னோடு அணைத்தவாறு தண்ணீருக்குள் இறங்கி நீச்சல் அடித்து கோடாலிகருப்பூர் கரையை நோக்கி வரத் தொடங்கினார். அந்த மாட்டை தொடர்ந்து மேலும் சில மாடுகள் வரத் தொடங்கின. தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் முதலில் சென்ற மாடு சோர்ந்து விடாமல் இருக்க தீயணைப்பு வீரர் முத்துக்குமார் அந்த மாட்டை தட்டிக்கொடுத்து கரையை நோக்கி அழைத்து வந்தார். முதல் கட்டமாக 28 மாடுகள் கரைக்கு வந்து சேர்ந்தன.
இதைப் பார்த்த சில மாட்டு உரிமையாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மாடுகளை அணைத்தவாறு தண்ணீருக்குள் இறங்கி மாடுகளை கரைக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். இரண்டாவது கட்டமாக 37 மாடுகள் கரை சேர்ந்தன. முடிவில் மீதமிருந்த 3 மாடுகளையும் மிகக் கடுமையான முயற்சிக்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் கரை சேர்த்தனர்.
இதையடுத்து மாடுகளை கரை சேர்த்த தீயணைப்பு வீரர் முத்துக்குமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், உதவிக்கு வந்த விவசாயிகள், அவர்களை சரியாக வழிநடத்திய அதிகாரி அம்பிகா ஆகியோரை பொதுமக்கள் பாராட்டினர். மீட்புக்குழுவினருக்கான உதவிகளை ஊராட்சி தலைவர் இளங்கோவன் செய்தார். தீயணைப்பு வீரர்களுக்கு மாடுகளின் உரிமையாளர்கள் நன்றி தெரிவித்தனர்.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றங்கரைத் தெருவை சேர்ந்த குட்டார் என்பவரின் மகன் முருகேசன் (வயது45) கூடைப்பின்னும் தொழிலாளி.
இவர் நேற்று மாலை முருகேசன் கொள்ளிடம் சோதனைச் சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக இறங்கினார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற முருகேசன் திடீரென தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதை கண்டு அருகில் நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சீர்காழி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சீர்காழி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து நீரில் மூழ்கிய முருகேசனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பின்னர் இரவு நேரமானதால் முருகேசனை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை 2-வது நாளாக முருகேசன் உடலை தீயணைப்பு படையினர் அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் தேடினர். அப்போது கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் முருகேசன் உடல் கிடப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் அவரது உடலை மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி கொள்ளிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ஆற்றில் மூழ்கி பலியான முருகேசனுக்கு அரசாயி (40) என்ற மனைவியும், கலைச்செல்வி (24) என்ற மகளும், சதீஷ்(22) என்ற மகனும் உள்ளனர்.
திருச்சி முக்கொம்பு மேலணையில் உடைந்த மதகுகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தண்ணீர் அதிகம் செல்வதால் தொழிலாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அங்கு தீயணைப்பு வீரர்கள், ஆம்புலன்ஸ் குழுவினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இன்று காலை கட்டுமான பொருட்கள் படகில் ஏற்றி செல்லப்பட்டு, பணிகள் நடந்து வரும் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆற்றின் நடுவே செல்லும் போது திடீரென படகு ஆற்றில் கவிழ்ந்தது. அதில் இருந்த 2பேர் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் 2 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். #kollidam #kollidambridge #mukkombudam
திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் கடந்த 22-ந்தேதி இரவு 9 மதகுகள் உடைந்தன. அதனை தற்காலிகமாக சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மதகுகளை அடைக்க 2½ லட்சம் மணல் நிரப்பிய சாக்கு மூட்டைகள் தயார் செய்யப்பட்டன. அணையின் முதலாவது மதகு முதல் 17-வது மதகு வரை, 220 மீட்டர் தூரத்துக்கு மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடந்து வருகிறது இதுவரை 1.25 லட்சம் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளது. இப்பணியில் 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் அணையில் இடிந்த 9 மதகுகள் மட்டுமின்றி மீதமுள்ள 36 மதகுகளும் நல்ல நிலையில் உள்ளதா? என்றும், கொள்ளிடம் அணையின் உறுதி தன்மை குறித்தும் ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவெடுத்தனர்.
இதற்காக, தண்ணீருக்கு அடியில் சென்று அணையின் மதகுகளில் விரிசல் உள்ளதா? அணையின் பிளாட்பாரம் விரிசல் விடாமல் இருக்கிறதா? என கண்டறிவதற்காக ஆழ்கடலில் மூழ்கி நீச்சல் பயிற்சி அனுபவம் உள்ள ‘ஹைடெக்’ சிவில் என்ஜினீயர்ஸ் ஏஜென்சியினர் தூத்துக்குடியில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.
அவர்களில், ஆழ்கடலில் மூழ்கி முத்து மற்றும் சிப்பிகளை சேகரிக்கும் அனுபவம் உள்ள நீச்சல் பயிற்சியாளர்கள் பாலு (வயது56), சிவா (40), சந்தனகுமார் (40) ஆகிய 3 பேரும் முக்கொம்பு கொள்ளிடம் அணைக்கு வந்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்துள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதனை சீரமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் சில மதகுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் எஞ்சிய அணைப் பகுதியும் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுகிறது.
இதனிடையே காவிரி ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகரிப்பு, திருச்சியில் பெய்த மழை ஆகியவற்றால் கொள்ளிடம் அணையில் தற்காலிக சீரமைப்பு பணி பாதிக்கப்பட்டது. இதையறிந்த பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி வந்தார்.
கொள்ளிடம் அணைப்பகுதிக்கு சென்று சீரமைப்பு பணியை பார்வையிட்ட அவர், அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்படாமல் விரைவாக முடிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளதையும் அதிகாரிகளிடம் எடுத்துரைத்தார். தற்காலிக சீரமைப்பு பணியை விரைந்து முடிப்பது தொடர்பாகவும், மேலும் சில மதகுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அதனை சீரமைப்பது தொடர்பாகவும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
தற்காலிக பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் ராசாமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
முக்கொம்பு கொள்ளிடம் அணையில் சேதமடைந்த பகுதிகளில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடந்து வருகிறது. அடுத்ததாக பாறாங்கற்கள் அடுக்கும் பணி நடைபெற இருக்கிறது. பொதுப்பணித்துறை மூலம் 260 மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் சுவர் அமைக்கப்படும். தற்போது முதல் கட்டமாக 60 சதவீத சீரமைப்பு பணி நிறைவு பெற்றுள்ளது. கொள்ளிடத்துக்கு வரும் தண்ணீரை கட்டுப்படுத்தும் பணிகள் இன்னும் 4 நாட்களில் நிறைவுபெறும். அதன் பின்னர் 2 லட்சம் கனஅடி தண்ணீர் வந்தாலும் கொள்ளிடம் அணைக்கு பாதிப்பு ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்தால் வெள்ள பாதிப்பை தடுப்பதற்காக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கடந்த மாதம் அதிக அளவு கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதன் காரணமாக அணையின் மதகுகள் உடைந்தன. தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் மேலும் சில மதகுகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது அதிகாரிகள் மட்டுமின்றி பொதுமக்கள், விவசாயிகளிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கர்நாடகாவில் மழை குறைந்ததன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது குறைக்கப்பட்டுள்ளது.
அங்கு கூடுதலாக மழை பெய்து தண்ணீர் திறந்துவிடப்பட்டால் திருச்சி கொள்ளிடம் மேலணையில் மேலும் சில மதகுகள் உடைந்து, அணையின் எஞ்சிய பகுதியும் உடைய விழுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அப்படியொரு நிலை ஏற்பட்டால் அதனை தடுப்பதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து அங்கு புதிய அணை கட்டுவதற்கான பணியை விரைவில் தொடங்க உள்ளனர். அதற்கான ஆய்வில் நிபுணர்கள் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நில அளவீடு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. #kollidam #kollidambridge #mukkombudam
திருச்சி முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் கடந்த 22-ந்தேதி இரவு 9 மதகுகள் உடைந்தன. அதனை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. உடைந்த பகுதி மட்டுமல்லாமல் அதோடு கூடுதலாக 220 மீட்டர் தூரம் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
அணையில் தென்கரை பகுதியில் முதலாவது மதகில் இருந்து 5-வது மதகு வரை தற்போது மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மணல் மூட்டைகளை வரிசையாக அடுக்கி வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூலம் 1 லட்சம் மணல் மூட்டைகளை கொண்டு மதகுகளில் அடைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனிடையே புதிய அணை கட்டுவதற்கான பணிகளில் நிபுணர் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொள்ளிடம் அணைப்பகுதிக்கு வரக்கூடிய தண்ணீரை காவிரி ஆற்றில் திருப்பிவிடும் பணி மிதவை பொக்லைன் எந்திரம் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தண்ணீரின் வேகம் அதிகமாக உள்ளதால் அதனை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
முக்கொம்பு அணையில் உடைந்த பகுதியை பார்வையிட்ட முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4 நாட்களுக்குள் தற்காலிக சீரமைப்பு பணிகள் முடிக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் தண்ணீரின் வேகம் மற்றும் மழை ஆகியவற்றால் முக்கொம்பு அணையில் சேதமடைந்த மதகுகளை சீரமைக்கும் பணி இரு வாரங்களுக்கு மேல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி முக்கொம்பு அணைக்கு 29,000 கனஅடி தண்ணீர் வந்தது. இதில் காவிரி ஆற்றில் 13,000 கன அடியும், கொள்ளிடம் ஆற்றில் 16,000 கனஅடியும் திறக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு 26,000 கனஅடி தண்ணீர் வந்தது. அங்கிருந்து 24,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
கொள்ளிடக்கரையில் ஏற்பட்ட உடைப்பால் நாதல்படுகை கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரின் வீட்டை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அவர் நேற்று தனது மனைவி, குழந்தைகளை அழைத்து கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு சென்றார்.
பின்னர் வீட்டை பார்வையிடுவதற்காக ரவி நேற்று மாலை வந்தார். அப்போது வெள்ளத்தில் சிக்கிய அவரது கூரைவீடு இடிந்து கிடந்தது. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து மனவேதனையில் இருந்த ரவி, நேற்று இரவு திடீரென பூச்சி மருந்தை குடித்து விட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிதம்பரம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதால் தமிழகத்துக்கு உபரி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால் மேட்டூர் அணைக்கு 2 லட்சம் கனஅடி வரை தண்ணீர் வந்தது. இதையொட்டி மேட்டூர் 2 முறை நிரம்பியது. உபரி தண்ணீர் அனைத்தும் பாசனத்துக்காக திருப்பி விடப்பட்டது.
காவிரி தண்ணீர் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் வழியாக திருச்சி முக்கொம்பை வந்தடைந்தது. இங்கிருந்து காவிரி மற்றும் கொள்ளிடத்துக்கு அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. குறிப்பாக கொள்ளிடத்தில் 2 லட்சம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் வந்தது.
இதையடுத்து தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆறுகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதில் குறிப்பாக கொள்ளிடத்தில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கொள்ளிட கரையோர கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றில் அளக்குடி பகுதியில் நேற்று முன்தினம் தடுப்பு சுவர் உடைப்பு ஏற்பட்டது.
இந்த பகுதியில் கொள்ளிடம் ஆற்று வெள்ளம் கரையில் மோதி ‘எல்’ வடிவ திருப்பத்தில் சென்று திரும்பும். இதனால் ரூ.64 கோடி செலவில் ஆற்றுக்குள் 20 அடி ஆழம் முதல் 60 அடி ஆழம் வரை சிமெண்ட் கான்கிரீட் முனைகள் அமைத்து அதன்மேல் சுமர் 1200 மீட்டர் தூரத்துக்கு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. இந்த பணிகள் கடந்த 2013-ம் ஆண்டு முடிக்கப்பட்டது.
இந்நிலையில் அளக்குடி கிராமத்தில் கொள்ளிட கரையில் ஏற்பட்ட உடைப்பால் சுற்றியுள்ள கிராமங்களில் தண்ணீர் புகுந்தது. முதலைமேடு, முதலைமேடுதிட்டு, நாதல்படுகை, வெள்ள மணல், மேலவாடி ஆகிய 5 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது.
கொள்ளிடம் ஆற்றில் தற்போது 1 லட்சம் கனஅடி வரை தண்ணீர் ஆக்ரோஷமாக பாய்ந்து செல்கிறது. இதனால் கரையில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் வேகமாக ஊருக்குள் சென்றது.
இதற்கிடையே இதுபற்றி தகவல் கிடைத்ததும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கலெக்டர் சுரேஷ்குமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை அடுக்கி கரை உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஆற்றின் தண்ணீர் வேகத்துக்கு, சீரமைப்பு பணிகள் கைகொடுக்கவில்லை.
இதையடுத்து பெரம்பலூர் மாவட்டததில் ராட்சத பாறாங்கற்கள் கொண்டு வரப்பப்பட்டு கரையோரம் அடுக்கி வைக்கப்பட்டன. அதன் மேல் மணல்மூட்டைகள் கொண்டு ராட்சத தடுப்பு போன்று அமைக்கப்பட்டது. இந்த முயற்சி ஓரளவு பலன் அளித்து வருகிறது.
இதற்கிடையே அளக்குடியில் ஏற்பட்ட கரை உடைப்பை இன்று 2-வது நாளாகவும் பொதுப் பணித்துறையினர் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், கிராம மக்கள் உதவியுடன் சீரமைத்து வருகின்றனர்.
இதற்கிடையே கரை உடைப்பு காரணமாக முதலைமேடு, முதலைமேடு திட்டு, நாதல்படுகை, வெள்ள மணல், மேல வாடி ஆகிய 5 கிராமங்களை சேர்ந்த 1000 பேர் தவித்து வருகின்றனர். அவர்களை பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு, தற்காலிக முகாம்களில் தங்க வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தேவையான உணவு, துணிகள் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் இந்த 5 கிராமங்களிலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. இவைகளை உடனடியாக மீட்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றின் அளக்குடி கிராமத்தில் மற்றொரு இடத்திலும் கரை உடைப்பு ஏற்பட்டது. சுமார் 7 மீட்டர் அளவுக்கு ஏற்பட்ட உடைப்பை பொதுப் பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் ஆசைத்தம்பி, நாகை சிறப்பு திட்ட செயற்பொறியாளர் ஞானசேகரன் ஆகியோர் பார்வையிட்டு அங்கேயே முகாமிட்டு உடைந்து விழும் பகுதிகளிலும் கரையின் மறுபுறம் சிதைந்துள்ள பகுதிகளிலும் பாறை கற்களை போட்டு அமைக்கும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே கரை உடைப்பு காரணமாக அளக்குடி சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 200 ஏக்கரில் மரவள்ளி கிழங்கு, கத்தரி, நெல் பயிர்கள் சேதமாகி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். #kollidamriver
அய்யம்பேட்டை:
கொள்ளிடம் ஆற்றில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுவதால் தஞ்சை மாவட்டம் வீரமாங்குடி, தேவன்குடி, பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடிக்காடு, கருப்பூர் ஆகிய கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. பட்டுக்குடி கிராமம் வடக்கு தெருவிலும், கூடலூர் கிராமம் வடக்கு தெருவிலும் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. வெள்ள சூழ்ந்த வீடுகளிலிருந்து பொதுமக்கள் தங்கள் கால்நடைகளுடன் வெளியேறி தற்காலிக முகாம்களில் தங்கி உள்ளனர். கால்நடைகளை மேடான பகுதிகளில் கட்டி வைத்துள்ளனர்.
அதுபோல அய்யம்பேட்டை பேரூராட்சி பகுதிக்கு கொள்ளிடத்திலிருந்து குடிநீர் கொண்டு செல்லும் நீரேற்று நிலையத்தையும் வெள்ள நீர் சூழ்ந்தது. மேலும் இந்த கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை, கரும்பு, முருங்கை, சவுக்கு தோட்டங்களிலும் வெள்ள நீர் புகுந்தது. மேலும் கூடலூர் காளியம்மன்கோவில் கும்பாபிக்ஷேகம் இந்த மாதம் 23-ம் தேதி நடக்க இருக்கிறது. இந்த கோவிலையும் வெள்ள நீர் சூழ்ந்தது. கொள்ளிடம் ஆற்றின் வெள்ளத்தில் செங்கல் சூளை ஒன்று மூழ்கி உள்ளது.
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது முதல் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கொள்ளிடக்கரைக்கு வந்து வெள்ளநீரை வேடிக்கை பார்த்து செல்கின்றனர். அவர்களை அதிகாரிகள் பாதுகாப்பாக செல்லும்படி அறிவுறுத்தி வருகின்றனர். பொதுமக்களின் வருகை அதிகமாக இருப்பதால் கொள்ளிட ஆற்றுக்கரை ஒரு சுற்றுலாதலம்போல் காட்சியளிக்கிறது. #kollidamriver
முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் சுமார் 65 ஆயிரம் கன அடி தண்ணீரும், கொள்ளிடத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கொள்ளிடத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை சமாளிக்க முடியாமல் பழைய இரும்பு பாலத்தை தாங்கி நின்ற 2 தூண்களில் விரிசல் ஏற்பட்டது. அந்த தூண்கள் ஆற்றுக்குள் இறங்கியதால் பாலம் இடிந்து விழுந்தது. பாலத்தின் இடிந்த பகுதிகளை தண்ணீர் அடித்து சென்றுவிட்டது.
இடிந்து விழுந்த பாலத்தின் அருகிலேயே கொள்ளிடம் ஆற்றில் ஏற்கனவே கட்டப்பட்ட புதிய பாலம் பயன்பாட்டில் இருப்பதால் வாகன போக்குவரத்துக்கோ, பொது மக்களுக்கோ எந்தவித பாதிப்பும் இல்லை.
திருச்சியை பொறுத்தவரை காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் அமைக்கப்பட்டுள்ள ரெயில்வே பாலங்களின் வழியாகத்தான் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
திருச்சி-சென்னை ரெயில் மார்க்கத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே இரண்டு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் ஒரு பாலம் மிகவும் பழமையானதாகும். இன்னொரு பாலம் இரு வழிப்பாதை அமைக்கும் பணியின்போது கட்டப்பட்ட புதிய பாலமாகும்.
கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதாலும், ஏற்கனவே வாகனங்கள் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு பாலத்தின் தூண்களில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழுந்து இருப்பதாலும் ரெயில்வே அதிகாரிகள் உஷார் அடைந்துள்ளனர். இதற்காக கொள்ளிடம் ரெயில்வே பாலங்களின் இரு பகுதிகளிலும் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் பணியாளர்களை நியமித்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
மேலும் இந்த பாலங்களின் வழியாக செல்லும் ரெயில்களுக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க தண்டவாளம் தகுதியாக உள்ளதா? என்பதை அறிவதற்காக நேற்று ஆய்வு பணிகள் நடைபெற்றது. இதற்காக கொண்டு வரப்பட்ட ராட்சத எந்திரத்தின் உதவியுடன் நேற்று மாலை கொள்ளிடத்தின் இரண்டு ரெயில்வே பாலங்களிலும் பொறியியல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வெள்ளப்பெருக்கினால் ரெயில்வே பாலத்திற்கு எந்தவித ஆபத்தும் இல்லை. தொடர்ந்து இதுபோன்ற ஆய்வு காவிரி பாலத்திலும் நடைபெறும் என ரெயில்வே அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட அதிகளவு உபரி வெள்ளநீர் நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆறு வழியாக சென்று கடலில் கலக்கிறது.
இந்தநிலையில் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பழையார் முகத்துவாரம் பகுதியில் கடலில் கலக்கும் இடத்தில் நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொள்ளிடம் ஆற்றின் முகத்துவாரம் லட்சக்கணக்கான கனஅடி நீர் கடலில் கலந்து வீணாகிறது. ஒருபக்கம் வெள்ளம். மறுபக்கம் கடலூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை பகுதிகளில் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லவில்லை.
இந்த 5 வாரங்களில் கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 242 டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளது. இதில் 93 டி.எம்.சி மேட்டூர் அணையில் தேக்கி வைத்துள்ளனர். மேட்டூரிலிருந்து கிட்டதட்ட 149டி.எம்.சி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையிலிருந்து 15 டி.எம்.சி காவிரியில் கலந்திருக்கிறது. அமராவதியிலிருந்து 6டி.எம்.சி தண்ணீர் காவிரியில் கலந்திருக்கிறது. கிட்டத்தட்ட 170டி.எம்.சி காவிரியில் வந்துள்ளது.இதில் 60 டி.எம்.சி மட்டுமே விவசாயத்திற்கு ஆங்காங்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
நீர்மேலாண்மைக்கு அரசு முக்கியத்துவம் தரவேண்டும். கால நிலை மாற்றத்தால் வெள்ளம், வறட்சி மாறி,மாறி வரும். இது மிகப்பெரிய பிரச்சனையாக வருங்காலத்தில் வரும். அதற்கு முன் எச்சரிக்கையாக அரசு செயல்படவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #PMK #AnbumaniRamadoss #KollidamRiver
ஸ்ரீமுஷ்ணம்:
கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு அதிகதண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து அணையில் இருந்து 1½ லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
கொள்ளிடம் ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கீழணையை காவிரி நீர் வந்தடைந்தது. அங்கிருந்து வினாடிக்கு 85 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரிநீராக கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் சிதம்பரம் அருகே வல்லம்படுகை கொள்ளிடம் ஆறு வழியாக கொடியம் பாளையத்தில் வங்க கடலில் கலக்கிறது.
இந்த நிலையில், கடலுக்குள் நீர் உள் வாங்காததால், வெள்ள நீர் எதிர்த்து பழைய கொள்ளிடம் ஆற்றில் உட்புகுந்துள்ளது. அந்த நீர் கரையோரம் உள்ள கீழகுண்டலபாடி, திட்டுக் காட்டூர், ஜெயங்கொண்டபட்டினம் உள்ளிட்ட 7 கிராமங்களை நேற்று முன்தினம் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் தவித்து வருகிறார்கள்.
இன்று 3-வது நாளாக 7 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு இன்னும் தண்ணீர் வடிய வில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதியடைந்து வருகிறார்கள். இதனால் பெராம்பட்டு, திட்டுகாட்டிற்கும், இடையே அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் மூழ்கியது. இதனால் அங்கு போக்கு வரத்து துண்டிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கிராம மக்கள் தங்களது அவசர தேவைக்காக படகு மூலம் திட்டுக்காட்டூருக்கு சென்று வருகிறார்கள். படகில் அதிகபேர் செல்வதால் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சிதம்பரத்தை அடுத்துள்ள வல்லம்படுகை அருகே எருக்கன்காட்டு படுகையில் ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியை சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக இன்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கொள்ளிட கரையோர கிராமங்களில் உள்ள படுகை பகுதியில் பயிர் செய்யப்பட்ட மரவள்ளி கிழங்கு, வாழை, நெல், கத்திரி, வெண்டை, மிளகாய் உள்ளிட்ட பயிர்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. சுமார் 1000 ஏக்கர் பரப்பில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதற்கிடையே கர்நாடகா அணையில் இருந்து 2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து 1.70 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் ஆற்றுப்பகுதிக்கு யாரும் செல்லக்கூடாது என்றும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் கொள்ளிட கரையோர மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் வெள்ளம் பாதித்த கிராமங்களை பாண்டியன் எம்.எல்.ஏ., சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், தாசில்தார் அமுதா ஆகியோர் படகு மூலம் சென்று பார்வையிட்டனர். அப்போது அவர்கள் உங்களுக்கு தேவையான குடிநீர், உணவு வசதிகள் செய்து தருகிறோம் எதற்கும் கவலைப்படவேண்டாம். 24 மணி நேரமும் தீயணைப் புதுறையினர் மீட்பு பணி யில் ஈடுபட தயாராக இருப்பதாக கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்